மதிய உணவு போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
ஆதார் எண் இல்லாத குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சாந்த சின்ஹா சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நாடு முழுவதும் பள்ளிகளில் குழந்தைகள் பயன்பெறும் மதிய உணவுத் திட்டத்திற்கு ஆதார் எண்ணைக் கேட்கக் கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதேவேளையில், முறைகேடுகளை தடுக்கவே ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் அது கட்டாயமாக்கப்படவில்லை எனவும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட கன்வில்கர், நவின் சின்ஹா அடங்கிய அமர்வு, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மதிய உணவு போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் முடிவிற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.