தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கியோர் அமர்வு விசாரணை நடத்தி, கடந்த ஏப்ரல் 8ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும், மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்ற கால வரம்பை உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்து தீர்ப்பளித்தது.
இத்தகைய சூழலில், நீதிமன்றத்தால் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய முடியுமா? உள்ளிட்ட 14 கேள்விகளில் விளக்கம் கோரி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கடிதம் எழுதி இருந்தார். குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விகள் குறித்தான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வில் இன்றோடு சேர்த்து கடந்த 10 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் , மாநில அரசுகளின் தரப்பு வழக்கறிஞர்கள் , மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக உள்ள மாநில அரசுகளின் தரப்பு வழக்கறிஞர்கள் என பல தரப்பும் விரிவான வாதங்களை 10 நாட்களாக முன்வைத்தன.
வழக்கு விசாரணையின்போது, மாநிலங்கள் எழுப்பும் ஒவ்வொரு விவகாரத்தையும் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றம் தலைமை ஆசிரியராக இருக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசியல் விவகாரங்களை குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் ஆலோசனை மூலம் தீர்க்கலாம் எனக் கூறியுள்ளது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, மசோதாக்கள் காலவரம்பின்றி நிறுத்தி வைக்கப்படுவதை நாங்கள் நியாயப்படுத்தவில்லை எனத் தெரிவித்தார். என்றாலும், மசோதாக்களை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும் கடந்த 55 ஆண்டுகளில் நாடு முழுவதும் 20 மசோதாக்கள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.
55 ஆண்டுகளில் மாநிலங்கள் அனுப்பிய மசோதாக்களில் 94 சதவீதம் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 1970ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் 17 ஆயிரத்து 150 மசோதாக்கள் ஆளுநர்களிடம் அனுப்பப்பட்டதாகவும் அதில், 94 சதவீதம் ஒப்புதல் பெற்றுள்ளதகாவும் மத்திய அரசு கூறியுள்ளது. இதில், 84 சதவீத மசோதாக்கள் ஒரு மாதத்திற்குள்ளாகவே ஒப்புதல் பெற்றுள்ளன என்றும் இது அரசியலமைப்பு கட்சி பாகுபாடின்றி முறையாக செயல்பட்டு வருவதை காட்டுகிறது என தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதா அல்லது மறுப்பதா, அதை சட்டமன்றத்திற்கு பரிந்துரைகளுடன் திருப்பி அனுப்புவதா அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ளது. அதேநேரம், ஆளுநர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போல செயல்படும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குற்றம்சாட்டினார்
தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் வில்சன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தேர்ந்தெடுத்த மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்று கூறினால், மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறை ஆளுநரின் அதிகாரமாக இல்லாமல், சட்டமன்ற நடைமுறையின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து 2 ஆண்டுகள் நீதிமன்றங்களில் அலைந்து பெற்ற தீர்ப்பை தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களும் கொண்டாடுவதால் தீர்ப்புக்கு எந்தவொரு பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று கூறினார். தொடர்ந்து குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பிலேயே பதில்கள் இருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இவ்வாறு இன்றுடன், இவ்வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை அறிவார்ந்த விசாரணையாக இருந்தது என தெரிவித்த தலைமை நீதிபதி அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இவ்வழக்கில் விசாரணை நடத்தியுள்ள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் பதவிக்காலம் நவம்பர் 23ம் தேதியுடன் நிறைவடையுள்ளது என்பதால் அதற்கு முன்பாக இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.