இந்தியா

அனைத்து பெண்களையும் அனுமதிக்கலாமா? - சபரிமலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அனைத்து பெண்களையும் அனுமதிக்கலாமா? - சபரிமலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

webteam

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கும், 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து அனைத்து வயது பெண்களுக்கு கோயிலுக்கு நுழைய அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சபரிமலையில் பெண் பக்தர்களை அனுமதிக்க மறுப்பது தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தீபக்மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுமுன் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தது. அப்போது, வயதைக் காரணம் காட்டி பெண்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதி மறுப்பது ஒருவகையான தீண்டாமை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

வாதத்தின்போது, பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக அமைந்துவிடாதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இறைவழிபாட்டில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை உள்ளது என்றும் தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் அளிக்கும் உத்தரவின்படி செயல்படத் தயாராக இருப்பதாக கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

விசாரணையின் போது, “சபரிமலை கோயிலின் ஆகம விதிகளின்படி மாதவிடாய் பருவத்தில் உள்ள பெண்களை அனுமதிக்க இயலாது. பாரம்பரிய வழிபாட்டு முறைகளின் நடைமுறைகளை மாற்ற இயலாது. அத்துடன் 10 முதல் 55 வயதுக்கு உட்பட்ட பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது” என்று தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் வாதங்கள் முடிந்ததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘இன்றைய வாதத்தின் போது, பிரம்மச்சரியம் என்பதன் அடிப்படையில் பெண்களுக்கு அனுமதி மறுக்க முடியாது என்பது தவறு. அதற்கு சங்கராச்சாரியார் கோயில் ஒரு உதாரணம்’என மத்திய மாநில அரசுகள் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.