உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல் முறையாக பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநில மொழிகளிலும் தீர்ப்புகளை வெளியிடும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. தென்னிந்திய மொழிகளில் கன்னடமும், தெலுங்கும் இடம்பெற்றிருந்த நிலையில், செம்மொழியான தமிழ் இடம்பெறாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியிடப்பட்டன. உச்ச நீதிமன்ற கூடுதல் கட்டடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராம்நாத் கோவிந்த் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.