இந்தியா

பெகாசஸ் விவகாரம்: உளவு பார்க்கப்பட்டதா? - விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

webteam

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில், சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டு பெகாசஸ் மென்பொருள் மூலமாக நாட்டில் உள்ள பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இம்மனு மீது விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி அனைத்து குடிமக்களின் தனி நபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும் என தெரிவித்த உச்சநீதிமன்றம், தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதேஅளவுக்கு தனிமனித உரிமைகளும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளது.

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட வல்லுநர் குழு விசாரணை நடத்த வேண்டும் எனவும் பெகாசஸ் உளவு சர்ச்சை தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடைபெறும் என தலைமை நீதிபதி ரமணா அமர்வு உத்தரவிட்டுள்ளது.