நாடு முழுவதும் உள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதில் பலர் படுகாயமடைந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
இதையடுத்து, தாரிக் அதீப் என்பவர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். அதைத் தடுக்க வேண்டும், மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில், ‘காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டன. அவர்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சரியான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது’ என்று கூறப்பட்டது.
பின்னர், ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க என்னென்னெ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.