இந்தியா

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி - பட்னாவிஸ், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி - பட்னாவிஸ், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

rajakannan

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் தேவேந்திரா பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதல்வராகவும் நேற்று காலை அதிரடியாக பதவியேற்றனர். இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. 

வழக்கு விசாரணையின் போது, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென மூன்று கட்சிகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டனர். ஆனால், விசாரணையை மூன்று நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று பாஜக சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வலியுறுத்தினார். 

இதனையடுத்து, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், தேவேந்திர பட்னாவிஸ் சமர்ப்பித்த ஆதரவு கடிதம், ஆட்சியமைக்க உத்தரவிட்ட ஆளுநரின் கடிதம் ஆகியவற்றை நாளை காலை 10.30 மணிக்கு மத்திய அரசு சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். இதனால், இன்றைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லையென்பது உறுதியாகிவிட்டது.