இந்தியா

10 நாட்களில் லோக்பால் கூட்ட தேதியை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் கெடு

10 நாட்களில் லோக்பால் கூட்ட தேதியை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் கெடு

webteam

லோக்பால் தேர்வுக் குழு கூட்ட தேதிகளை 10 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக லோக்பால் மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதா கடந்த 2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற அமைப்பும் உருவாக வழி ஏற்பட்டது. 

லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய பிரதமர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்படவேண்டும். அந்தக் குழுவில் பிரதமர், இந்திய தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், மக்களவையில் ஏதிர்க்கட்சியின் தலைவர் மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெறுவர். 

இந்தக் குழுவை நியமிப்பதில் சிக்கல் இருப்பதாக பலமுறை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவந்தது. அதாவது எதிர்க்கட்சி தலைவர் இல்லை, சட்ட வல்லுநரை நியமிப்பதில் சிக்கல் என்றெல்லாம் தொடர்ந்து விளக்கங்களைக் மத்திய அரசு கொடுத்துவந்தது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு லோக்பால் அமைப்பதற்கு கெடு விதித்தது. இதனால் கடந்த 2018 செப்டம்பர் மாதம் மத்திய அரசு லோக்பால் அமைப்பிற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்ய ஒரு தேடுதல் குழுவை அமைத்தது. இந்தத் தேடுதல் குழுவிற்கு ஓய்வுப் பெற்ற நீதிபதி ரஞ்சன் பிரகாஷ் தேசாய் தலைவராக நியமக்கப்பட்டார். இவருடன் சேர்ந்து மொத்தம் 8 பேர் கொண்ட குழு லோக்பால் உறுப்பினர்களுக்கான தேடுதல் பணியில் ஈடுபட்டது. இந்தத் தேடுதல் குழு பிப்ரவரி மாதம் இறுதிக்குள் பெயரை தேர்வு குழுவிற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் லோக்பால் தொடர்பாக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் “இன்னும் 10 நாட்களுக்குள் லோக்பால் தேர்வுக் குழு கூட்டத்தின் தேதிகளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்” என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபாலிடம் தெரிவித்தார்.