Supreme Court
Supreme Court PT DESK
இந்தியா

அதானி - ஹிண்டென்பெர்க் விவகாரம்: செபி அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

PT WEB

அதானி - ஹிண்டென்பர்க் விவகாரத்தை விசாரிக்க செபி அமைப்பு கோரிய ஆறு மாத கால அவகாசத்தை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உலகின் மூன்றாவது பெரும் பணக்காரராக இருந்த இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் அதானி பங்குச்சந்தைகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் பொய்யான தகவல்களை பரப்பி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டென்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ம் தேதி ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கை இந்திய பங்குச் சந்தைகளில் மட்டுமில்லாமல் இந்திய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போதும்கூட இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவுடன் வர்த்தகமாகி ஏராளமானோருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

Gautham Adhani

ரூ. 12 லட்சம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு உலக பணக்காரர்கள் வரிசையில் 38வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் அதானி. இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேநேரத்தில் ஹிண்டென்பர்க் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு மற்றும் செபி அமைப்பு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஹிண்டென்பர்க் அறிக்கை தொடர்பான விசாரணைக்கான செபியின் பரிந்துரையை சீலிட்ட கவரில் நீதிபதிகளிடம் வழங்கியதோடு, “அதானி குழுமத்துக்கு எதிரான ஹிண்டென்பர்க் அறிக்கை மீதான விசாரணைக்கு நீதிபதி ஒருவரின் தலைமையிலான குழு அமைக்கலாம். யார் அந்த நீதிபதி என்பதை நீதிமன்றம் முடிவு செய்யலாம்” என தெரிவித்தார். சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யும் மத்திய அரசின் யோசனையை முழுமையாக நிராகரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசு மட்டுமல்ல; எந்த தரப்பிடம் இருந்தும் நாங்கள் பரிந்துரையும் பெறப்போவதில்லை.

Supreme court

உச்ச நீதிமன்றம் தான் குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்தையும் இறுதி செய்யும். அதானி நிறுவனம் முறைகேட்டு விவகாரத்தில் கண்டிப்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள தற்போது பதவியில் இருக்கும் நீதிபதியை நியமிக்க இயலாது என்பதால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும். மேலும் உச்ச நீதிமன்றம் அமைக்கும் நிபுணர்கள் குழுவுக்கு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த மார்ச் மாதம் வழங்கிய தீர்ப்பில், “இந்த விவகாரம் என்பது மூலதனம் தொடர்பானது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்று. இதுபோன்ற சர்ச்சை விவகாரங்கள் வருவதன் மூலம் செபி அமைப்பு சரியான பாதுகாப்பை வழங்கவில்லை என்பது தெரியவருகிறது. பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் அதானி - ஹிண்டென்பர்க் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான ஒரு கட்டமைப்பை செபி அமைப்பு உடனடியாக உருவாக்க வேண்டும்” என தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

மேலும் “இந்த விவகாரத்தில் செபி விதிகளின் எஸ் 19 என்பது மீறப்பட்டுள்ளதா, பங்கு விலையில் ஏதேனும் கையாடல் செய்யப்பட்டுள்ளதா என்பதை செபி அமைப்பு விசாரிக்க வேண்டும். விரிவான விசாரணையை தினமும் நடத்தி இரண்டு மாதங்களில் சீலிடப்பட்ட கவரில் நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் செபி அமைப்பு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் சிறப்பு நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்படுகிறது. அதில், ஓபி.பட், நீதிபதி ஜே.பி.தேவ்தத், நந்தன் நிலக்கனி, கே.வி.காமத், சோமசேகரன் சுந்தரேசன் ஆகிய ஐந்து பேர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது” என தீர்ப்பு வழங்கினார்.

இதன் அடிப்படையில் இந்த குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்தது. அதே நேரத்தில் செபி அமைப்பு விவகாரத்தில் மேலும் ஆறு மாத காலம் கூடுதல் அவகாசம் கேட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு வழங்கிய அறிக்கை கிடைக்கப்பெற்றதாகவும் இந்த வாரம் அதனை படித்து பார்த்துவிட்டு வரும் திங்கட்கிழமை அதன் மீது விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் “செபி அமைப்பு கோரும் குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசம் என்பதை இந்த சூழலில் வழங்க முடியாது. வேண்டுமென்றால் மூன்று மாத அவகாசம் வழங்கலாம். அதன் மீது திங்கட்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.