இந்தியா

எஸ்.பி. வேலுமணி வழக்கை விசாரிக்க தடையில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெண்டர் முறைகேடு தொடர்பாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணியின் மனுவை, சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எஸ்.பி. வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்றும், லஞ்சஒழிப்புத் துறை விசாரணை அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் உததரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு விசாரித்தது. இதை எதிர்த்த லஞ்ச ஒழிப்பு துறையின் எதிர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு இன்று பிறப்பிக்கப்படுகிறது.

இந்நிலையில் தான், இதனை எதிர்த்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு அவசர வழக்காக, உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோஹி, பி.வி.நாகரத்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எந்த வகையிலானது? எவ்வாறு இப்படி ஒரு உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பிக்க முடியும்? என அதிருப்தி தெரிவித்தனர்.

அப்போது வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணியின் இந்த மனுவானது ஏற்கனவே இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ள வழக்கோடு இணைத்து விசாரிப்பதாக உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு தெரிவித்தது. ஏனெனில் இந்த கோரிக்கைகள் ஒரே மாதிரியானவை தான் என தெரிவித்தார்.

ஆனால் அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணியின் மனு என்பது கிரிமினல் குற்றம் தொடர்புடையது அதை முறைப்படி தனி நீதிபதி தான் விசாரிக்க முடியும்.

ஏனெனில் முன்னதாக எஸ்.பி.வேலுமணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல்நிலை விசாரணை அறிக்கையின் நகலை கொடுக்க உத்தரவிட்ட வழக்கே தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணையில் உள்ளது.

ஆனால் தற்போது உயர்நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை (FIR.ஐ) ரத்து செய்ய புதிய மனுவை வேலுமணி தாக்கல் செய்துள்ளார், அது சொத்து குவிப்பு குற்றச்சாட்டை தொடர்புடைய கிரிமினல் வழக்கு. எனவே இதை கிரிமினல் வழக்கு விசாரணை முறைப்படி தனி நீதிபதி தான் விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முதலில் சென்னை உயர்நீதிமன்றம் வேலுமணி தொடர்பான வழக்கில் தனது இடைக்கால உத்தரவை பிறப்பிக்கட்டும், அதன் பின்னர் அந்த உத்தரவை பார்த்து விட்டு இந்த மனுவை விசாரிக்கலாம். மேலும் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு என்பது உச்சநீதிமன்றத்தில் உள்ள தற்போதைய மேல்முறையீட்டு வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், டெண்டர் முறைகேடு தொடர்பாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் வருகிற 19-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், எஸ்.பி வேலுமணி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.