பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு பத்து விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
10 விழுக்காடு இடஒதுக்கீட்டை எதிர்த்து சமத்துவத்திற்கான இளைஞர்கள் அமைப்பும், கவுஷல்காந்த் மிஸ்ரா என்பவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். பொருளாதாரத்தை அளவுகோலாக வைத்து இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்றும், இது அரசமைப்பு சட்டத்தை மீறுவதாகும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்ட முன்வடிவிற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது. சட்டமுன்வடிவு குறித்து 4 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.