எம்பியாக தேர்ந்தெடுத்து மக்களவைக்கு அனுப்பிய சிவகங்கை தொகுதியின் மீது முழு கவனம் செலுத்துமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளின் விசாரணையை எதிர்கொண்டு வரும் கார்த்தி சிதம்பரம், வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார். அப்போது, அவரது வெளிநாட்டுப் பயணத்துக்கு சிபிஐயும், அமலாக்கத்துறையும் ஆட்சேபம் தெரிவிக்காததால், உச்சநீதிமன்றம் கார்த்திக்கு அனுமதியளித்தது.
ஆனால், ஏற்கெனவே தெரிவித்துள்ளபடி 10 கோடி ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, ஏற்கெனவே செலுத்தப்பட்ட 10 கோடி ரூபாய் உச்சநீதிமன்றத்தின் வசம் இருப்பதாக கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் கூறினார். ஆனால், அந்த 10 கோடி ரூபாயை திருப்பி அளிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் சார்பில், 10 கோடி ரூபாயை திருப்பி அளிக்குமாறு மனுதாக்கல் செய்யப்பட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான விடுமுறைக்கால சிறப்பு அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், எம்பியாக தேர்வு செய்த சிவகங்கை மக்களவைத் தொகுதியின் மீது கவனம் செலுத்துமாறு கார்த்திக்கு அறிவுரை கூறினர். ஒருவேளை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில், மேலும் 10 கோடி ரூபாயை பிணைத்தொகையாக செலுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.