இந்தியா

“கடன்களுக்கான வட்டியை ஒரு அளவுக்கு மேல் குறைக்க முடியாது”- எஸ்பிஐ தலைவர்

webteam

 டெபாசிட் மற்றும் கடன்களுக்கான வட்டியை ஒரு அளவுக்கு மேல் குறைக்க இயலாது என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி கடந்த ஓராண்டில் வங்கிகளுக்கான கடன் வட்டியை 1.35% குறைத்த போதும் அதற்கான முழுப் பலனையும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார், நம் நாட்டில் குடிமக்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள் போதுமானதாக இல்லாத நிலையில் அவர்கள் வங்கி டெபாசிட் திட்டங்களை பெரிதும் நம்பியுள்ளதாக கூறினார்.

இந்தச் சூழலில் டெபாசிட்டுகளுக்கான வட்டியை குறைத்தால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். கடனுக்கான வட்டியை குறைக்கும்போது டெபாசிட்டுகளுக்கான வட்டியும் குறையும் என்றும் அவர் விளக்கினார்.