இந்தியா

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வங்கி மேலாளருக்கு விடுமுறை கொடுக்க மறுத்ததால் மரணம்?

EllusamyKarthik

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.ஐ வங்கி மேலாளருக்கு உயரதிகாரிகள் விடுமுறை கொடுக்க மறுத்ததால், சிகிச்சை எடுத்து கொள்ள முடியாமல் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏஜென்சி லட்சுமிபுரம் கிளையில் மேலாளராக பணியாற்றி வந்தவர் 39 வயதான பிட்டா ராஜேஷ். கடந்த மாத இறுதியில் கொரோனா தொற்று பாதிப்புக்கான அறிகுறி அவருக்கு இருந்ததால் தன் உயர் அதிகாரிகளிடம் விடுமுறை கேட்டுள்ளார். அது தொடர்பாக கடிதமும் எழுதியுள்ளார். ஆனால் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விடுமுறை கொடுக்க மறுத்துள்ளனர். 

அதனால் தொடர்ந்து பணியாற்றி வந்த அவர் கடந்த 1-ஆம் தேதியன்று மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.

உடனடியாக இதனை சொல்லி விடுமுறை கேட்ட அவரிடம், பரிசோதனை முடிவின் பிரிண்ட் அவுட் காப்பியை கொடுக்குமாறு உயர் அதிகாரிகள் பணித்துள்ளனர்.

அதன்படி செப்டம்பர் 2ஆம் தேதியன்று தனது பரிசோதனை முடிவை ராஜேஷ் காட்டிய பின்னர் விடுமுறை எடுத்துக்கொள்ள அந்த அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். 

தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், கடந்த 11ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி ராஜேஷ் உயிரிழந்துள்ளார். 

‘ராஜேஷ் சிகிச்சையில் இருந்த போது கூட உயர் அதிகாரிகள் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு இம்சை கொடுத்தனர். அவரது மரணத்திற்கு அந்த அதிகாரிகள் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அமராவதி வட்ட எஸ்.பி.ஐ ஆபிஸர்ஸ் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.