பாட்னாவை அடுத்த தானாபூர் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையம், தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. வெளியே எஸ்பிஐ வங்கியின் பெயர் பலகை மற்றும் ஏடிஎம் செட்டப் அப்படியே இருந்தாலும், உள்ளே பணத்திற்குப் பதிலாக மக்கள் சிகையலங்காரம் செய்து வருகின்றனர். வழக்கமாக ஏடிஎம் மையங்களுக்கு மக்கள் பணமெடுக்கவே செல்வார்கள். ஆனால், தானாபூரில் உள்ள இந்த குறிப்பிட்ட மையத்திற்குள் நுழைந்தவர்கள், அங்கு பணம் வழங்கும் இயந்திரம் இல்லாததைக் கண்டு திகைத்துப் போயுள்ளனர். அந்த ஏடிஎம் மெஷின் இருந்த இடத்தில் தற்போது ஒரு முடி திருத்தும் நிலையம் இயங்கி வருகிறது. விசாரணையில், இந்த இடத்தில் முன்பு பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வந்தது தெரியவந்தது. சில காரணங்களால் வங்கி அந்த ஏடிஎம் சேவையை நிறுத்திவிட்டு, இடத்தை காலி செய்துள்ளது.
அதன்பிறகு, அந்த கடையின் உரிமையாளர் அந்த இடத்தை சலூன் கடை வைப்பதற்கு வாடகைக்கு விட்டுள்ளார். கடையின் உரிமையாளர் பழைய ஏடிஎம் போர்டையோ அல்லது கண்ணாடிக் கதவுகளையோ மாற்றவில்லை. வெளியூரிலிருந்து வருபவர்கள் மற்றும் அவசரமாக பணமெடுக்க நினைப்பவர்கள், போர்டைப் பார்த்து உள்ளே சென்றுவிட்டு, அங்கு கத்தரிக்கோலும் கண்ணாடியும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைகின்றனர். "பணத்தை எடுக்க உள்ளே போனால், 'தலைமுடி வெட்டணுமா சார்?' எனக் கேட்கிறார்கள்" என அப்பகுதி மக்கள் வேடிக்கையாகத் தெரிவிக்கின்றனர். இந்த வினோதமான ’ஏடிஎம் சலூன்’ தற்போது அந்த ஊரின் முக்கிய அடையாளமாகவே மாறிவிட்டது!