இந்தியா

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: ஊருக்குள் உலாவந்து பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா யானை

webteam

மூணாறு அருகே ஒருமாத இடைவெளிக்கு பின் கொம்பன் காட்டு யானை படையப்பா மீண்டும் இரண்டு கடைகள் மற்றும் வேன் ஆகியவற்றை சேதப்படுத்தியது.

மூணாறு அருகே உள்ள முக்கிய சுற்றுலா பகுதியான மாட்டுபட்டி எக்கோ பாய்ண்ட்டில் கடந்த மாதம் பட்டப்பகலில் சாலையோர கடைகளில் இருந்து மக்காச் சோளம், பழங்கள் ஆகியவற்றை உண்டுவிட்டச் சென்ற படையப்பா யானை, ஒருமாத இடைவெளிக்கு பின் மீண்டும் மாட்டுபட்டி படகு சவாரிக்கு செல்லும் நுழைவு பகுதி சாலையில் வலம் வந்தது.

அப்பகுதியில் ஜான்சன், சுகன் ஆகியோரின் கடைகளை சேதப்படுத்தியதுடன் அன்னாசி பழம், மக்காச்சோளம் ஆகியவற்றை தின்று தீர்த்தது. இதனிடையே சாலையில் படையப்பா வலம் வந்ததால் மூணாறு, வட்டவடை இடையே ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தாமாக காட்டிற்குள் சென்ற படையப்பா நள்ளிரவு நேரத்தில் மாட்டுபட்டி எஸ்டேட் டிவிஷனுக்குச் சென்றது. அங்கு வீட்டின் முன் நிறத்தப்பட்டிருந்த ராமர் என்பவருக்குச் சொந்தமான வாகனத்தை சேதப்படுத்தியது.

அடிக்கடி ஊர்வலம் வந்து மக்களை அச்சுறுத்தி உடமைகளை சேதப்படுத்தும் படையப்பாவை நிரந்தரமாக காட்டிற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.