இந்தியா

அகிலேஷ் யாதவ் போட்டியிடும் தொகுதியில் மத்திய அமைச்சர் கார் மீது தாக்குதல்

ஜா. ஜாக்சன் சிங்

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் தொகுதியில் மத்திய அமைச்சரின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவி வருகிறது. இதுவரை சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடாத சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த முறை கார்ஹல் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜக சார்பில் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் சத்யபால் சிங் பாஹல் களம் இறக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக காஹ்கல் தொகுதிக்கு நேற்று சென்ற சத்யபால் சிங், இரவு காரில் டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு பாதுகாப்பாக போலீஸாரின் வாகனங்களும் உடன் சென்றன. இதனிடையே, அட்டிக்குல்லாபூர் கிராமம் அருகே அவரது கார் சென்ற போது அங்கு தீடீரென வந்த 20-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், அமைச்சரின் காரை முற்றுகையிட்டு இரும்புக் கம்பி, உருட்டுக் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் அவரது கார் கண்ணாடிகள் நொறுங்கின.

இதனைத்தொடர்ந்து, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் கார்களில் இருந்து இறங்கி அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர். ஆனால், அந்த கும்பல் அருகில் இருந்த நீரோடையில் இறங்கி அங்கிருந்து தப்பினர். இந்த சம்பவத்தில் மத்திய அமைச்சர் சத்யபால் சிங்குக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து சத்யபால் சிங் கூறுகையில், "எனது காரை சூழ்ந்த கும்பல் 'அகிலேஷ் ஜிந்தாபாத்' கோஷத்தை எழுப்பியபடியே இரும்புக் கம்பிகளை கொண்டு தாக்கினர். அகிலேஷ் யாதவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் இதுபோன்ற மிரட்டும் செயல்களில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபடுகின்றனர். இந்த மிரட்டலுக்கு எல்லாம் பாஜகவினர் அடிபணிய மாட்டார்கள்" என்றார்.

இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அமைச்சரின் கார் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.