விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையால் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். விபத்தின் உள்ளே சிக்கி இருப்பவர்களை நினைக்கும் போது எனது மனம் கனக்கிறது. மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி நிவாரண உதவிகளை மாநில அரசு உடனடியாக செய்து தர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். வழக்கம் போல் இன்று பணியில் தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த போது, திடிரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கு பட்டாசுகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வே காரணம் எனச் சொல்லப்படுகிறது.