இந்தியா

சாரதா நிதி நிறுவன மோசடி : ராஜீவ்குமாரை கைது செய்ய சிபிஐ திட்டம்

webteam

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில்,கொல்கத்தா மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று கைது செய்யப்பட கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு சிபிஐ வசம் வருவதற்கு முன்னதாக, ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவே விசாரித்து வந்தது. அப்போது, ஊழலில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் செல்போன்கள், லேப்டாப்கள் மற்றும் முக்கியமான சாட்சியங்கள் அடங்கிய தகவல்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு ராஜீவ் குமார் அனுமதி வழங்கியதாக ராஜீவ்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மாற்றப்பட்டு,கொல்கத்தா மாநகர புதிய காவல் ஆணையராக அனுஷ் சர்மா நியமிக்கப்பட்டார்.

சாரதி நிதி நிறுவன ஊழல் வழக்கை, தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் தரும்படி, ராஜீவ்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காததால் ராஜீவ்குமாரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ முறையிட்டுள்ளது. மேலும் அவர் மீது சந்தேகம் அடைந்துள்ள சிபிஐ, நாட்டைவிட்டு அவர், தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் ராஜீவ்குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸையும் பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து விமான நிலையங்களையும் சிபிஐ உஷார்படுத்தப்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் முன்பு கொல்கத்தா மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அவர் வீட்டிற்கு விரைந்த அதிகாரிகள், அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். மேலும் நேரில் ஆஜராகவில்லை எனில், ராஜீவ்குமாரை இன்றே கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மேற்குவங்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.