Sara Ali Khan
Sara Ali Khan Twitter
இந்தியா

மஹாகால் கோயிலில் வழிபாடு: ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை சாரா அலி கான்

Justindurai S

இந்தியில் லக்ஷ்மன் உடேகர் இயக்கத்தில் நடிகை சாரா அலிகான் 'ஜரா ஹட்கே ஜரா பச்கே' என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகர் விக்கி கௌஷல் உடன் சாரா அலிகான் இணைந்து நடித்துள்ள இப்படம் நாளை (ஜூன் 2) வெளியாகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக 'ஜரா ஹட்கே ஜரா பச்கே' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விக்கி கௌஷல் மற்றும் நடிகை சாரா அலிகான் ஆகிய இருவரும் நிகழ்ச்சிக்குப் பின் லக்னோவில் உள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்தனர். அதற்குமுன் நடிகை சாரா அலிகான் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீப் தர்காவிற்கு சென்று வழிபட்டார்.

Sara Ali Khan

இதனிடையே, மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலுக்கு சென்ற நடிகை சாரா அலிகான், அங்கு அவர் சிறப்பு பிரார்த்தனை செய்தார். தனது தாயாருடன் சென்ற சாரா அலிகான் சிவனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவரான நடிகை சாரா அலிகான், உஜ்ஜனி மகாகாலேஷ்வர் கோயிலுக்கு சென்று வழிபட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் 'வைரல்' ஆனது. ஒருதரப்பினர் அவரை கடுமையாக 'ட்ரோல்' செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தன்னுடைய தனிப்பட்ட நம்பிக்கையை பற்றி பேசுபவர்களை குறித்து தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என பதிலடி கொடுத்துள்ளார் நடிகை சாரா அலி கான்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், ''என்னுடைய வேலையை (நடிப்பு) நான் மிகவும் சீரியஸாக செய்து வருகிறேன். நான் மக்களுக்காகவே வேலை செய்கிறேன். என்னுடைய நடிப்பு மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வருத்தப்படுவேன். ஆனால், என்னுடைய நம்பிக்கை என்பது சொந்த விஷயம். மஹாகால் கோயிலுக்கு சென்றதுபோல், இதே பக்தி உணர்வுடன் அஜ்மெர் ஷரிப்க்கும் செல்வேன். தொடர்ந்து செல்வேன். பேசுபவர்கள் என்ன வேண்டுமென்றாலும் பேசட்டும். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.