மகாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில் பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளன. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியில் உள்ளனர். மூன்று கட்சியைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் பற்றிய பேச்சுகள் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. சமீபத்தில், ஔரங்கசீப்பைப் புகழ்ந்து பேசியதற்காக மகாராஷ்டிரா சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்தும் இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற தானும் விரும்புவதாகவும், அதில் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ”முகலாய அரசா் ஒளரங்கசீப் காலத்தைவிட மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசின் ஆட்சி மோசமாக உள்ளது” என்று சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ”ஒளரங்கசீப் புதைக்கப்பட்டு 400 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரை மறந்துவிடுங்கள்.
மகாராஷ்டிரத்தில் இப்போது விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள ஒளரங்கசீப்தான் காரணமா? பாஜக கூட்டணி அரசே காரணம். விவசாயிகள் மட்டுமன்றி வேலையில்லாத இளைஞா்களும் பெண்களும் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனா். ஒளரங்கசீப் அட்டூழியத்தில் ஈடுபட்டாா் என்றால், பாஜக கூட்டணி அரசு செய்வது என்ன? ஒளரங்கசீப் ஆட்சியைவிட பாஜக கூட்டணி அரசின் ஆட்சி மோசமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.