பிரிஜ் பூஷன் சரண் சிங், சஞ்சய் சிங்
பிரிஜ் பூஷன் சரண் சிங், சஞ்சய் சிங் pt web
இந்தியா

வீராங்கனை அனிதா ஷியோரன் தோல்வி.. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு!

Angeshwar G

பாஜக எம்.பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருவரான பிரிஜ் பூஷன் சிங் மீது, இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சக வீராங்கனைகளோடு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.

இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நாட்டிற்காக தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீச முடிவுசெய்தனர் வீராங்கனைகள். ஆற்றில் பதக்கங்களை வீசுவதை தடுக்க விவசாயிகள் சங்கத் தலைவர் ந்ரேஷ் திகாயத் வீராங்கனைகளிடம் பேசி பதக்கங்களிடம் பெற்றுக் கொண்டு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டது. பின் கடந்த ஜீன் 15 ஆம் தேதி இவர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையை காவல்துறையினர் தொடர்ந்தனர்.

இதனிடையே முன்னாள் நிர்வாகிகள் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பின், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உயர்பதவிகளுக்கான தேர்தலை நடத்த தவறியதற்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பினை, சர்வதேச மல்யுத்த நிர்வாக அமைப்பான United World Wrestling இடைநீக்கம் செய்தது.

இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் இன்று நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தலைவர் பதவிக்கு காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்த முன்னாள் வீராங்கனை அனிதா ஷியோரனும் போட்டியிட்டார். அவருடன் உத்திரப்பிரதேச மல்யுத்த கூட்டமைப்பின் துணைத் தலைவர் சஞ்சய் சிங்கும் போட்டியிட்டார். இருவருக்கும் இடையே இருமுனைப்போட்டி இருந்தது.

இந்த போட்டியில் அனிதா ஷியோரன் வென்றிருந்தால் மல்யுத்த சம்மேளனத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் பலரும் அனிதா ஷியோரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஆனால் சஞ்சய் சிங், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு நெருங்கிய உதவியாளராக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் சஞ்சய் சிங் வெற்றி பெற்றுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக அவர் பொறுப்பேற்றுள்ளார்.