ஷாஜகான், மம்தா
ஷாஜகான், மம்தா ட்விட்டர்
இந்தியா

சந்தேஷ்காலி விவகாரம்: முக்கிய நபர் கைது.. கொண்டாடிய பெண்கள்.. மம்தா கட்சி எடுத்த அதிரடி முடிவு!

Prakash J

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (TMC) சார்பில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் ஷேக். திரிணமூல் காங்கிரஸ் பிரமுகரான இவரது வீட்டுக்கு கடந்த ஜனவரி 5ஆம் தேதி சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளை ஷாஜகான் ஷேக்கின் ஆதரவாளர்கள் வழிமறித்து தாக்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஷாஜகான் ஷேக் தலைமறைவானார். இதற்கிடையே ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராகப் பாலியல் பாலியல் வன்புணர்வு மற்றும் நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிப்பது தொடர்பாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்னையை அம்மாநில ஆளுநர் முதல் பாஜக வரை கையில் எடுக்க, ஆளும் மம்தா பானர்ஜிக்கு இது பெரும் தலைவலியைக் கொடுத்தது.

இந்த நிலையில், இந்த சூழலில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஷாஜகானை சிறப்பு வங்காள போலீசார் அடங்கிய குழு நேற்றிரவு கைது செய்தது. 55 நாட்களாக போலீசார் பிடியில் சிக்காமல் தப்பிவந்த நிலையில், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த கைது நடவடிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் வரவேற்று உள்ளது. எனினும், மேற்கு வங்காள போலீசிடம் அவர் பாதுகாப்பாக காவலில் உள்ளார் என்று பாஜக கூறி வருகிறது.

போலீஸாரின் இந்தக் கைது நடவடிக்கை ஷாஜகான் ஷேக்கை சந்தேஷ்காலி வழக்கில் சேர்க்கும்படி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி, “இந்த வழக்கில் பொது நோட்டீஸ் வழங்கப்படும். சந்தேஷ்காலி வழக்கில் தடை உத்தரவு எதுவும் இல்லை. அவரை கைதுசெய்யாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

மம்தா பானர்ஜி

முன்னதாக, கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி நில அபகரிப்பு குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் வீடு உட்பட அரை டஜன் இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பசிர்காத் நீதிமன்றத்தில் இன்று ஷாஜகான் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவரை 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் ஷாஜகான் கைது செய்யப்பட்டதை சந்தேஷ்காலி பெண்கள் உற்சாகமாய்க் கொண்டாடினர். தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகள் நீக்கம் செய்து அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: வீல்சேர் இல்லாததால் முதியவர் உயிரிழந்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்!