இந்தியா

தன்னை வெளிநாட்டவர் என்று கூறிய சமாஜ்வாடி தலைவர் - பாடம் புகட்டிய 10 வயது மணிப்பூர் சிறுமி

சங்கீதா

பாஜகவை சாடுவதற்காக சமாஜ்வாடி கட்சித் தலைவர் மணீஷ் ஜெகன் அகர்வால், தவறுதலாக மணிப்பூர் சிறுமியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி என்று ட்விட்டரில் குறிப்பிட்டதை அடுத்து அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அண்மையில் நடந்த உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பெரும்பான்மை வாக்கு சதவிகிதத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கூட்டணி இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதேபோல், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும் 125 தொகுதிகளை கைப்பற்றி யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவர்களில் ஒருவரான மணீஷ் ஜெகன் அகர்வால், பாஜகவை சாடுவதற்காக 10 வயதான மணிப்பூர் சிறுமி லிசிப்ரியா கங்குஜத்தை வெளிநாட்டு சுற்றுலாப் பயணி என்று தவறாகக் கருதி, தாஜ்மஹால் அருகே அவர் இருந்த புகைப்படத்தைப் பயன்படுத்தி பாஜகவைத் தாக்கி ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

உலக அதியசங்களில் ஒன்றான தாஜ்மஹால். பிளாஸ்டிக் மாசுபாட்டால் அதன் அழகு பாழ்படுவதைக் காட்டும் விதமாக, கையில் பதாகையுடன் தாஜ்மஹால் அருகே, தான் நின்றிருந்த புகைப்படத்தை லிசிப்ரியா ட்வீட் செய்திருந்தார். இந்த புகைப்படத்தை தான் சமாஜ்வாடி கட்சியின் டிஜிட்டல் மீடியா ஒருங்கிணைப்பாளரான மணீஷ் ஜெகன் அகர்வால், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உத்தரப்பிரதேச அரசை கடுமையாக சாடியிருந்தார்.

அதில், "வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட மாநில பாஜக ஆட்சியின் நிலையை கண்ணாடி போன்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாஜக ஆட்சியில் யமுனை நதி அசுத்தத்தால் நிரம்பியுள்ளது. இதனால் அதன் கரையோரம் உள்ள தாஜ்மஹாலின் அழகு மங்கி கறைபடிந்து போயுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட, பாஜக அரசுக்கு தாஜ்மஹாலின் மோசமான நிலையை காட்டுவது மிகவும் வெட்கக்கேடானது" என்று ட்வீட் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தன்னை ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி என்று மணீஷ் ஜெகன் அகர்வால் கூறியதால் கோபமடைந்த லிசிப்ரியா, தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பதிலளித்துள்ளார். அதில், "வணக்கம் ஐயா, நான் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இல்லை. நான் ஒரு இந்தியர் என்பதில் மிக்க பெருமை கொள்கிறேன். " என்று ரீட்வீட் செய்துள்ளார். இதையடுத்து  மணீஷ் ஜெகன் அகர்வாலுக்கு. லிசிப்ரியா தக்கப் பாடம் புகட்டியதாக நெட்டிசன்கள் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.