சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு உரிமை கோரி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தரப்பு ஒன்றரை லட்சம் பக்க ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கும் மோதல் ஏற்பட்டு, கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின் சின்னமான சைக்கிளுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அகிலேஷ் தரப்பு நாடியுள்ளது. அவரது ஆதரவாளரும், முலாயம் சிங்கின் சகோதரருமான ராம் கோபால் யாதவ், தேர்தல் ஆணையத்தில், 7 அட்டை பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட ஒன்றரை லட்ச பக்க ஆவணங்களை தாக்கல் செய்தார்.
அதில், 200 எம்.எல்.ஏ.க்கள், 56 எம்.எல்.சி.க்கள், 15 எம்.பி.க்களின் ஆதரவு கடிதங்கள் அதில் அடங்கியுள்ளன. கட்சியில் உள்ள 5,000 பிரதிநிதிகளில் 4,600 பேரின் ஆதரவு கடித ஆவணங்களும் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், சைக்கிள் சின்னமும், கட்சியும் தங்களுக்கு சொந்தம் என உரிமை கோரி, நாளை முலாயம் சிங் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிடவுள்ளது. இதற்காக முலாயம் இன்று டெல்லி வருகிறார். உத்தரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் தொடங்கி ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது.