இந்தியா

யாருக்கு பெரும்பான்மை... சமாஜ்வாதி கட்சியில் பலப்பரீட்சை

யாருக்கு பெரும்பான்மை... சமாஜ்வாதி கட்சியில் பலப்பரீட்சை

webteam

சமாஜ்வாதி கட்சியில் யாருக்கு பெரும்பான்மை தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்ற பலப்பரீட்சை முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகனும் முதலமைச்சருமான அகிலேஷ் இடையே நடைபெறுகிறது.

இந்த நிலையில் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இன்று சமாஜ்வாதி கட்சியின் மாநாட்டை முலாயம் சிங் யாதவ் வருகிற 5ம் தேதி‌க்கு ஒத்திவைத்துள்ளார். உத்தரப் பிரதேச ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சியில் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் ஆகியோரது கோஷ்டிகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்குவதும் பிறகு திரும்பப் பெறுவதுமாக திருப்பங்கள் நடந்த நிலையில், யாருக்கு பெரும்பான்மை தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்ற பலப்பரீட்சை இப்போது நடைபெறுகிறது.

கட்சியின் கவுரவ தலைவராக முலாயமை நியமித்து, தேசிய தலைவராக அகிலேஷ் யாதவை அவரது ஆதரவாளர்களின் கூட்டம் அறிவித்தது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் சின்னமான சைக்கிளை உரிமை கோர, தேர்தல் ஆணையத்தை முலாயம் சிங் யாதவ் சந்திக்கவுள்ளார். இதற்காக லக்னோவில் நடைபெறுவதாக அறிவித்திருந்த கட்சியின் மாநாட்டை அவர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே, தனது பலத்தைக் காட்ட எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இன்று நடத்துகிறார்.