Sakshi Malik
Sakshi Malik File Image
இந்தியா

’நான் போராட்டத்தை கைவிட்டேனா? தயவுசெய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்’- சாக்‌ஷி மாலிக் விளக்கம்!

Justindurai S

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான ஒரு வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். இந்த விவகாரத்தில் அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரா்கள் தொடர் போராட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.

Wrestlers Protest

டெல்லி ஜந்தா் மந்தரில் ஒரு மாதமாக போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகள் சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகாட், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோரை மே 28-ஆம் தேதி டெல்லி போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஜந்தா் மந்தரில் மீண்டும் போராட அவா்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என போலீசார் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், ஹரித்வாா் கங்கையில் ஒலிம்பிக் பதக்கங்களை வீசப்போவதாக அவர்கள் அறிவித்தனர். அப்போது வீராங்கனைகளைத் தடுத்து நிறுத்திய விவசாய சங்கத்தினா், அவா்களின் பதக்கங்களைப் பெற்று போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனா். மேலும் 'ஒரு வாரத்திற்குள் பிரிஜ் பூஷண் சிங் கைது செய்யப்படவில்லை என்றால், நாடு முழுவதும் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டம் தொடா்ந்து நடைபெற்று போராட்டங்கள் தொடங்கப்படும்' என எச்சரித்தனர்.

Amith shah

இச்சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் நேற்று இரவு சந்தித்தனர். 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்த சந்திப்பில் “பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்ய வலியுறுத்த வேண்டும்” என அவர்கள் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இன்று, சாக்‌ஷி மாலிக் போராட்டத்திலிருந்து விலகியதாகவும், போராட்டத்தில் இருந்து வெளியேறிய அவர் மீண்டும் ரயில்வே பணிக்கு திரும்பியதாகவும் தகவல் வெளியானது. சாக்‌ஷி மாலிக் போராட்டத்தை கைவிட்டதாக வெளியான செய்தி பிரிஜ் பூஷணுக்கு எதிரான போராட்டத்தில் திடீர் திருப்புமுனையாக பார்க்கப்பட்டது.

Protesting wrestler sakshi malik

இந்நிலையில், போராட்டக் களத்திலிருந்து தான் வெளியேறியதாக கூறப்பட்ட தகவலை சாக்‌ஷி மாலிக் மறுத்துள்ளார். இதுகுறித்து சாக்‌ஷி மாலிக் அளித்துள்ள விளக்கத்தில், “நான் போராட்டத்திலிருந்து விலகியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம். சத்தியாகிரகத்துடன், ரயில்வேயில் எனது வேலையையும் பார்த்து வருகிறேன். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.