sai pallavi ramayana movie / ramayana promo function / istagram / kollywoodcinema@x
இந்தியா

’ஒற்றை வார்த்தை..’ சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி! கொதித்தெழும் ராம பக்தர்கள்?

நடிகை சாய் பல்லவி கூறிய ஒரு கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அப்படி என்ன பேசினார் சாய் பல்லவி? அவரது கருத்துக்கு எதிர்ப்புகள் எழுவது ஏன்? என்பதை பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை சாய் பல்லவி. தனது இயல்பான நடிப்பாலும், நடனத் திறமையாலும் ரசிகர்களைக் கவர்ந்த இவர், தற்போது இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தில் சீதையாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் உலகளாவிய வெளியீட்டை முன்னிட்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

ramayana team

அப்போது சர்வதேச ஊடகங்களிடம் பேசிய சாய் பல்லவி, ராமாயணம் குறித்து தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் தெரிவித்த ஒரு கருத்துதான் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது, "ராவணன் முழுக்க முழுக்க கெட்டவன் அல்ல. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ராவணன் இருக்கிறான். நமக்குள் இருக்கும் நல்லது, கெட்டது ஆகியவற்றை நாம் அடையாளம் கண்டுகொண்டு, காலப்போக்கில் நம்மை நாமே மாற்றிக்கொள்வது முக்கியம்" என்று தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

குறிப்பாக, ராமாயணத்தில் ராவணன் என்பவர் ராமனின் மனைவியான சீதையைக் கடத்திச் சென்று இலங்கையில் சிறை வைத்தவர். இதன் காரணமாகவே ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே போர் ஏற்பட்டு, இறுதியில் ராவணன் கொல்லப்படுவதாக ராமாயணக் கதை கூறுகிறது. இப்படிப்பட்ட சூழலில், சீதையாக நடித்துள்ள ஒரு நடிகை ராவணன் முழுமையாகத் தீயவன் அல்ல என்று கூறுவது எந்த வகையில் சரியானது? என்று சிலர் கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

sai pallavi

ஆனால், மறுபுறம் சாய் பல்லவியின் கருத்துக்கு ஆதரவும் பெருகி வருகிறது. ராவணன் ஒரு சிறந்த சிவபக்தர், மிகுந்த அறிவாற்றல் கொண்டவர், வேதங்களிலும் இசையிலும் புலமை பெற்றவர் எனப் பல்வேறு நற்குணங்களைக் கொண்டிருந்ததாக ராமாயண மரபுகளில் கூறப்படுகிறது. அதேநேரத்தில், அவரது ஆணவமும் தவறான செயல்களுமே அவரது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்ததாகவும் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், ஒருவரிடம் நற்குணங்கள் இருந்தாலும் அவர் செய்யும் தவறுகளை நியாயப்படுத்த முடியாது. அதேபோல், நம்மிடம் இருக்கும் தீய குணங்களை அடையாளம் கண்டு அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் சாய் பல்லவி கூறிய கருத்தின் உண்மையான நோக்கம் என்றும் பலர் விளக்கம் அளித்து வருகின்றனர். சாய் பல்லவியின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.