இந்தியா

சாதி, மதம் கடந்து திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு பாதுகாப்பான வீடு; கேரளா வரிசையில் டெல்லி

சாதி, மதம் கடந்து திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு பாதுகாப்பான வீடு; கேரளா வரிசையில் டெல்லி

JustinDurai

சாதி, மதம் கடந்து திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு பாதுகாப்பான இல்லம் மற்றும் அவசர உதவி எண் சேவை டெல்லியில் துவங்கப்பட்டுள்ளது. 

சாதி மறுப்பு திருமண விவகாரங்களில் சமூக பஞ்சாயத்து அமைப்புகள் தலையிடுவதற்கு தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் சாதி மறுப்பு தம்பதிகளுக்கு பாதுகாப்பான இல்லங்கள் வழங்குவது குறித்து ஆராயுமாறு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது.

இதையடுத்து சாதி, மதம் கடந்து திருமணம் செய்தவர்கள் சொந்த சமூகங்களால் புறக்கக்கணிப்படும் நிலை ஏற்பட்டால் அவர்களைப் பாதுகாப்போடு தங்க வைப்பதற்காக, கேரள அரசு பாதுகாப்பு இல்லங்களை கடந்த ஆண்டு தொடங்கியது. இந்நிலையில், தற்போது டெல்லி அரசும் சாதி, மதம் கடந்து திருமணம் செய்த தம்பதிகளுக்கு பாதுகாப்பு இல்லம் வழங்கும் சேவையை தொடங்கியுள்ளது.  

இதன்படி ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கான ‘181’ இலவச தொலைபேசி எண்ணை, சாதி மறுப்பு தம்பதிகளையும் உள்ளடக்கி இந்த சேவையை விரிவுபடுத்தி உள்ளது. இதன்படி அச்சுறுத்தல்கள்  காரணமாக உதவி தேவைப்படும் தம்பதிகள் இந்த உதவி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்தால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லம் ஒதுக்கப்படும். அச்சுறுத்தல் நீங்கும் வரை அல்லது தம்பதிகள் வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவிக்கும் வரை இந்த பாதுகாப்பு இல்லத்தில் தங்கிக் கொள்ளலாம். இந்த பாதுகாப்பு இல்லங்களில் 24 மணி நேரமும் போலீசார் நிறுத்தப்படுவார்கள் என்று டெல்லி அரசு கொண்டு வந்த புதிய நிலையான இயக்க நடைமுறை கூறுகிறது.  

தற்போது, கிங்ஸ்வே முகாமில் ஒரு பாதுகாப்பான வீடு அமைக்கப்பட்டுள்ளது, இது 60 சதுர அடி பரப்பளவில் இரண்டு அறைகள், ஒரு கழிப்பறை மற்றும் ஒரு சமையலறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது மூன்று ஜோடிகளுக்கு இடமளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.