இந்தியா

ஹேமந்த் கர்கரே குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் சாத்வி

webteam

மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாகூர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜ,க வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங் தாகூர் அறிவிக்கப்பட்டுள்ளார். மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளியான இவர், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் திக்விஜய்சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில் சாத்வி பேசும்போது, “மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் மும்பை சிறையில் இருந்தபோது போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார் கரே, என்னை மோசமாக நடத்தினார். சகிக்க முடியாத கடுமையான வார்த்தைகளால் திட்டுவது உள்ளிட்ட சித்ரவதைகளை செய்தார். இதனால் ஆத்திரத்தில் அவரிடம் நான், நீங்கள் அழிந்துபோவீர்கள் என்றேன். ஒரு மாதத்துக்குப் பின் அவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்றார். ஹேமந்த் கர்கரே, மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்தப் பேச்சுக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் இதைக் கண்டித்தனர்.

ஐபிஎஸ் அதிகாரிகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. அவர்களின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், “பயங்கரவாதிகளுடன் துணிச்சலுடன் போராடி தனது உயிரை இழந்தவர் கர்கரே ஐபிஎஸ். அவரின் இந்தச் செயலுக்கு அசோக சக்ரா விருது வழங்கியிருக்கிறது மத்திய அரசு. இந்நிலையில் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அதிகாரி பற்றி வேட்பாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளது கண்டனத்திற்கு உரியது’’ என்று பதிவிட்டனர்.

இதுபற்றி விளக்கமளித்த பாஜக, ’மாலேகான் குண்டுவெடிப்பு வ‌ழக்கில் மன ரீதியாகவும், ‌உடல் ரீதியிலும் சந்தித்த துன்புறுத்தல்களால் சாத்வி பிரக்யா இ‌வ்வாறு கூறியிருக்கலா‌ம் என்றும் அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தது. 

இந்நிலையில், ஹேமந்த் கர்கரே பற்றிய தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் சாத்வி பிரக்யா. ‘’அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது பேச்சு எதிரிகளுக்கு சாதகமாக இருப்பதால், இதை திரும்ப பெறுகிறேன். ஆனால் நான் அனுபவித்த வலிகளை மறக்க முடியாது. யங்கரவாதிகள் கர்கரேவை கொன்றதால் அவர் தியாகிதான்’’ என்றார்.