இந்தியா

மோடிக்கு எதிராக களமிறங்கிய முன்னாள் வீரர் தேஜ் பகதூர் வேட்புமனு தள்ளுபடி

Rasus

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதி சார்பில் களமிறக்கப்பட்ட தேஜ் பகதூரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு 4 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் மே 19-ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே வாரணாசி தொகுதியில் போட்டியிட, எல்லைப் பாதுகாப்பு பணியிலிருந்து நீக்கப்பட்ட தேஜ்பகதூர் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல்
செய்திருந்தார். இதனையடுத்து தனது வேட்பாளரை மாற்றிய சமாஜ்வாதி, தேஜ்பகதூரையே தனது வேட்பாளராக அறிவித்தது. எனவே சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட மீண்டும் ஒருமுறை தேஜ்பகதூர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் தேஜ்பகதூரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக எல்லை பாதுகாப்பு பணியிலிருந்து நீக்கப்பட்டது ஏன் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் தேஜ்பகதூரை கேட்டுக்கொண்டது. அவர் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தும் கூட தேர்தல் ஆணையம் அவரின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

எல்லையில் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லாமல் இருக்கிறது என்ற புகாரை வீடியோவாக வெளியிட்டிருந்தவர் தேஜ்பகதூர். இதனையடுத்து அவர் எல்லைப் பாதுகாப்பு பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.