தலைகவசம் அணிய சொல்லி அறிவுரை வழங்கும் சச்சின் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் விளையாட்டு வீரரான சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து சமூக விழிப்புணர்வு தொடர்பான விஷயங்களில் அக்கறை காட்டி வருகிறார். இந்தியாவை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்பதில் அவர் விழிப்புணர்வோடு செயல்பட்டு வருகிறார் என பிரதமர் மோடியே சமீபத்தில் இவரை பாராட்டி இருந்தார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை அவர் பதிவேற்றி இருக்கிறார். அதில் காரில் பயணிக்கும் அவரை பொதுமக்கள் சிலர் கையசைத்து தங்களின் அன்பை தெரிவிக்கின்றனர். அப்போது சாலையில் ஒரு தம்பதி மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். அவர்களை பார்த்து “முன்னால் உட்கார்ந்திருப்பவர் மட்டும் ஹெல்மட் போட்டு இருக்கிறார்..உங்கள் தலைகவசம் எங்கே?” என்று கேள்வி எழுப்புகிறார். ஆனால் அந்த வார்த்தை அந்தத் தம்பதிக்கு கேட்கவில்லை. உடனே காரின் வேகத்தை மெதுவாக்கி விட்டு அந்தத் தம்பதி அருகில் வந்ததும் அறிவுரை வழங்குகிறார். அதன் பின் புரிந்து கொண்டது அந்தத் தம்பதி. அப்போது சச்சின் “ஒவ்வொரு முறையும் நான் கவனிக்கிறேன். பின்னால் அமர்ந்திருப்பவர்கள் பெரும்பாலும் ஹெல்மட் அணிவதில்லை. பின்னால் இருப்பவரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும்” என கேமிராவை பார்த்து குறிப்பிடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.