இந்தியா

“நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்” - சட்டசபையில் சீறிய சச்சின் பைலட்

webteam

காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 107 பேர் ஒற்றுமையுடன் இருப்பதாக அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சருமான சச்சின் பைலட் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு இடையே இன்று சட்டசபை கூடியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் போர்க்கொடி தூக்கி 18 எம்.எல்.ஏக்களுடன் பிரிந்து சென்ற சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கியமாகியுள்ளார். முதலமைச்சர் அசோக் கேலாட்டை தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் நேற்று வீட்டில் சென்று சந்தித்த சச்சின் பைலட், அரசியல் விரிசல் குறித்து பேசினார்.

இந்நிலையில் இன்று ராஜஸ்தான் சட்டசபை கூடியிருக்கிறது. இதில் சச்சின் பைலட், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உட்பட அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பங்கேற்றுள்ளனர். இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சியான பாஜக நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரும் என தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 101 எம்.எல்.ஏக்களும், அதன் கூட்ட கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவு சுயேட்சைகளின் எண்ணிக்கையையும் சேர்த்து மொத்தம் 122 எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை உள்ளது. பாஜகவிற்கு 72 எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவு கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 78 எம்.எல்.ஏக்களின் பலம் உள்ளது.

இந்நிலையில் இன்று சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ ராஜேந்திர ராவுதர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய சச்சின் பைலட், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான தாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாக கூறினார். அத்துடன் தங்களின் பலம் 107 எம்.எல்.ஏக்களாக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் தங்களது எம்.எல்.ஏக்களின் பலம் விளிம்பு நிலையில் இல்லை எனவும், அது மிகவும் பலம் வாய்ந்ததாகவும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.