சச்சின் பைலட், அசோக் கெலாட்
சச்சின் பைலட், அசோக் கெலாட் file image
இந்தியா

அசோக் கெலாட்டுக்கு எதிராக மீண்டும் களத்தில் குதித்த சச்சின் பைலட்! ராஜஸ்தானில் நடப்பது என்ன?

Prakash J

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக உள்ள அசோக் கெலாட் மற்றும் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில், முந்தைய பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது அசோக் கெலாட் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக சச்சின் பைலட் குற்றம்சாட்டினார்.

அசோக் கெலாட்

அதாவது, “பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவிற்கு எதிராக இன்னும் ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அவரின் ஊழல் புகார்களை விசாரிக்கவில்லை. இதைப் பார்த்தால் ராஜஸ்தான் அரசு, அங்கே பாஜகவுடன் சமரசம் செய்துள்ளதோ என்று மக்கள் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுவிடும்” எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுதான், ராஜஸ்தான் அரசியலில் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது. மேலும், 2018ஆம் ஆண்டு தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியைப் பூர்த்திசெய்யக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சச்சின் பைலட் அறிவித்திருந்தார். அதன்படி, ஜெய்ப்பூரில் இன்று, தனது ஆதரவாளர்களுடன் சச்சின் பைலட் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சச்சின் பைலட்

அவருடைய போராட்டத்துக்கு அசோக் கெலாட் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் உணவுத்துறை அமைச்சர் பிரதாப் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே காங்கிரஸ் தலைமை எச்சரித்தும் சச்சின் போராட்டம் நடத்தியிருப்பது, ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்குமிடையே நடந்துவரும் உட்கட்சி மோதல் காங்கிரஸுக்கு மீண்டும் தலைவலியை உண்டாக்கி இருக்கிறது. ஏற்கெனவே இரண்டு மூன்று காங்கிரஸ் தலைமையும் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர். ஆனாலும், அவர்களுக்குள் தொடர்ந்து மோதல் போட்டி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் உண்ணாவிரதம் மூலம் மீண்டும் மோதலைத் தொடங்கியிருக்கிறார் சச்சின் என காங்கிரஸார் சொல்கின்றனர்.

”இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் முதல்வர் பதவியில் சச்சின் அமர வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. ஏற்கெனவே இதுகுறித்து காங்கிரஸ் தலைமையும் உத்தரவாதம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதை மனதில் வைத்துத்தான் தற்போது சச்சின் உண்ணாவிரதத்தை நடத்தி திரும்ப பார்க்க வைத்துள்ளார்” என்கின்றனர், காங்கிரஸார்.

சச்சின் பைலட்

சச்சின் பைலட் - அசோக் கெலாட்டின் அதிகார போட்டி மோதலால், ராஜஸ்தான் அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.