செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
பிரசித்தி பெற்ற சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் 18ம் படி அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் துவங்கிய கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் 18ம் படி பூஜை நடத்த முடியவில்லை.
இந்நிலையில், தற்போது சபரிமலையின் பிரதான மகர சங்ரம பூஜை, மகர விளக்கு பூஜை, பந்தள அரசன் வழங்கிய திருவாபரணங்களுடன் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு மகா தீபாரதனை, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் ஆகியன ஜனவரி 14ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இன்றைய மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலத்தின் முதல் படி பூஜை நடந்தது.
இதற்காக சபரிமலையின் 18 படிகளும் சுத்தம் செய்யப்பட்டு, பட்டு விரித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின் ஒவ்வொரு படியிலும் நிலை விளக்கேற்றி பூஜை நடத்தப்பட்டது. 18 தேவதைகளையும் ஒவ்வொரு படியிலும் அமர்த்தி நடத்தும் இந்த படி பூஜையில் பங்கேற்போருக்கு சகல ஐஸ்வர்யங்களும், சர்வ பாக்கியங்களும், எல்லாம் வல்ல நலன்களும் கிடைக்கப்பெற்று வாழ்வ செழிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
சபரிமலை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார முரளி நம்பூதிரி அடங்கிய குழுவினர் "படி பூஜை" நடத்தினர். தமிழ் பாரம்பரிய தவில் நாதஸ்வர மேள வாத்தியம் இசைக்க நடந்த படி படி பூஜைக்காக கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்த படி பூஜையில் பங்கேற்றும் ஒருவருக்கு ரூ.1 லட்சத்தி 37 ஆயிரத்து 900 ரூபாய் கட்டண் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த படி பூஜையின் முன்பதிவு வரும் 2040 ம் ஆண்டு வரை முடிந்துள்ளது.