சபரிமலையின் ஆகம விதிகளை மீட்டெடுக்கும் நோக்கில் குமுளியில் சபரிமலை பாதுகாப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் அடுத்தகட்ட பணிகளில் கேரள அரசும் தேவஸ்சம் போர்டும் களம் இறங்கியுள்ளன. இதையடுத்து சபரிமலை விவகாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்துமத அமைப்புகள் பல, சபரிமலையின் ஆச்சாரங்களுக்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. இதற்காக மாநிலம் முழுவதும் சபரிமலை ஆச்சாரங்களை பாதுகாக்கும் அமைப்புகள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில் இடுக்கி மாவட்டம் குமுளியில் சபரிமலையின் ஆகமவிதிகளை பாதுகாக்கும் சபரிமலை பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. குமுளி துர்கா கணபதி பத்ரகாளி கோவிலில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் இணைந்து இந்த குழுவை உருவாக்கியுள்ளனர். இந்த குழு சார்பில் சபரிமலையின் பழங்கால ஆகம விதிகளை பாதுக்காக்க போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக குழுநிர்வாகிகள் தெரிவித்தனர்.