இந்தியா

பக்தர்கள் கூட்டத்தில் திக்கித் திணறும் சபரிமலை: அன்போடு அசராமல் பணியாற்றும் ஊழியர்கள்

webteam

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் சன்னிதானம் செல்ல இயலாத பக்தர்களை தூக்கிச் சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்.

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வ சாதாரணமாக நாள்தோறும் பக்தர்களின் தரிசன எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்து ஒரு லட்சத்தை நெருங்கி பதிவாகி வருகிறது.

இந்நிலையில், சபரிமலையின் பக்தர்கள் பாதுகாப்பிற்காகவும் அவர்களை அரவணைத்துச் செல்லும் பணிக்காகவும் ஆறு கட்டங்களாக 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். போலீஸாரோடு, தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஆர்ஏஎஃப் உள்ளிட இதர சேனைகளும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இதையடுத்து சபரிமலைக்கு வரும் மாற்றுத் திறனாளி பக்தர்களை பாதுகாப்பு பணியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் 18ஆம் படியில் இருந்து தூக்கிச் சென்று அவர்களை தரிசனம் செய்ய வைக்கும் நெகிழ்ச்சி நிகழ்வும் அரங்கேறி வருகிறது.

அதோடு களைப்பாக வரும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இளைப்பாற இடம் தேடி அமர வைப்பது, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை தனியே நிறைவேற்றுவது என்று போலீஸார் மற்றும் தேசிய மீட்பு படையினரின் சேவைகள் தொடர்கின்றன.

மொத்தத்தில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு சுகமான தரிசனத்திற்கு கேரள அரசுத் துறைகளும் திருவிதாஙகூர் தேவஸ்வம் போர்டும் சிறப்பு ஏற்பாடுகளை இணைந்து செய்து, பக்தர்கள் மனதில் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் விதைத்து வருகிறனர்.