இந்தியா

சபரிமலையில் வழிபட முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் - அதிகாலையில் பதட்டம்

சபரிமலையில் வழிபட முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் - அதிகாலையில் பதட்டம்

rajakannan

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது தொடக்கத்தில் எவ்வித எதிர்ப்பும் கிளம்பவில்லை. பின்னர், சில நாட்கள் செல்ல தீவிரமான எதிர்ப்பாக மாறியது. கோயிலுக்கு செல்ல முயலும் பெண்களை அங்குள்ள பக்தர்களே தொடர்ச்சியாக தடுத்தி நிறுத்தி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டாலும், முழுமையாக வழிபாடு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

தொடக்கத்தில் பெண்ணியவாதி, பத்திரிகையாளர் என இரு பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயற்சித்து அது தோல்வியில் முடிந்தது. அன்று முதல் மனிதி என்ற அமைப்பின் மூலம் சில பெண்கள் கூட்டாக செல்ல முயன்றதும் கடைசியில் தோல்வியில் முடிந்தது.

இடையில், இரண்டு பெண்கள் மட்டும் அதிகாலையில் சென்று தரிசனம் செய்து வந்தனர். அதுவும், யாருக்கும் தெரியாமல் எப்படி சென்று வந்தனர் என்ற கேள்வி எழுந்தது. பின்னர், கேரள போலீசார் அவர்கள் தரிசனம் செய்ததற்கான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டனர்.

இந்நிலையில், கண்ணூரை சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா என்ற இரண்டு பெண்கள் இன்று சபரிமலைக்கு செல்ல முயன்றுள்ளனர். இருவரும் 30-35 வயதுடையவர்கள். இருவரும் ஆண்களைப் போல் உடை அணிந்து அதிகாலை 5 மணிக்கு தங்களது பயணத்தை தொடங்கியுள்ளனர். போலீசார் பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்ததன் பேரிலே வந்ததாக அவர்கள் கூறினர். சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சபரிமலையை நோக்கி எப்படியோ அவர்கள் பயணம் செய்துவிட்டனர்.

ஆனால், பாதி வழியில் பக்தர்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டனர். பக்தர்கள் அவர்களை சுற்றி வளைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்களை தொடர்ந்து பயணிக்க வழிசெய்தனர்.

இருப்பினும், நீலமலை என்ற பகுதியில் ஏராளமான பக்தர்கள் திரண்டு தடுத்து நிறுத்தினர். அதற்குமேல் அவர்களால் பயணத்தை தொடரமுடியவில்லை. சுமார் இரண்டு மணி நேரம் அந்தப் பகுதியில், பதட்டமான சூழல் நிலவியது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிப்பார்த்தனர். ஆனால், அவர்கள் சமாதானம் ஆகவில்லை. பின்னர், போலீசார் அவர்களை பாதுகாப்புடன் வாகனத்திற்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து பாதுகாப்புடன் பம்பைக்கு கொண்டு வரப்பட்டனர்.

மொத்தம் 9 பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல திட்டமிட்டு சென்றுள்ளனர். அதில் ஒருவர் கூறுகையில், “ஐயப்பன் அங்கேதான் இருக்கிறார். பெண்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு ஐயப்பன் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஏன் இவர்கள் போராடுகிறார்கள்” என்றார்.

முன்னதாக, சபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுள் ஒருவரான கனகா துர்கா அவரது மாமியாரால் கடந்த திங்கட்கிழமை கடுமையாக தாக்கப்பட்டார். வலதுசாரி போராட்டக்காரர்களின் அச்சுறுத்தல் காரணமாக இரண்டு வாரங்கள் தலைமறைவாக இருந்து பின்னர் தன்னுடைய வீட்டிற்கு சென்ற போது தாக்கப்பட்டுள்ளார்.