இந்தியா

பெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை

rajakannan

பெண்கள் உள்ளே நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் என சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி கூறியதை அடுத்து, இரண்டு பெண்களும் திரும்பி செல்ல சம்மதம் தெரிவித்தனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கவிதாவும், பெண்ணியவாதியான ரஹானா பாத்திமா என்பவரும் இன்று காலை சபரிமலைக்கு சென்றனர். இதில் ரஹானா இருமுடி அணிந்து ஐயப்ப பக்தராக சென்றார். பலத்த பாதுகாப்புடன் கவச உடைகள் அணிந்தபடி இருவரும் ஐயப்பன் கோயில் நோக்கிச்சென்றனர். இவர்கள், சபரிமலை சன்னிதானத்தின் நடைப்பந்தல் வரை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் அதற்கு மேல், இரு பெண்களையும் அனுமதிக்க மறுத்து ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பக்தர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்தியும், ஐயப்ப பக்தர்கள் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து, இரு பெண்களையும் திருப்பி அனுப்ப, கேரள அரசு உத்தரவிட்டது. பெண் செய்தியாளர்கள், பெண்ணியவாதிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும், பக்தர்களை அனுமதிப்போம் என்றும் கேரள அரசு தெரிவித்தது. இதையடுத்து இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால், திரும்பி செல்ல முடியாது என கூறிய ரெஹ்னா ஃபாத்திமா, எல்லா பக்தர்களை போல 41 நாட்கள் முறையாக விரதம் இருந்துள்ளதாகவும், சபரிமலை கோவிலுக்குள் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெண்கள் உள்ளே நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் என சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி ரஜூவரு கண்டராவு எச்சரிக்கை விடுத்துள்ளார். “18 ஆம் படிகளில் பெண்கள் நுழைந்தால், கோவில் நடையை மூடிவிடுவேன். நானும் என்னுடைய வீட்டிற்கு சென்றுவிடுவேன். நான் பக்தர்கள் பக்கம் உள்ளேன். கோவிலில் வன்முறை நடைபெறும் இடத்தில் என்னால் இருக்க முடியாது. இந்த தருணத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டேன். நான் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கிறேன். ஆனால், நான் பக்தர்கள் பக்கம்தான். யாருக்கும் எதுவும் நடந்துவிடக் கூடாது. நான் நிற்கதியாக நிற்கிறேன். நான் என் நிலையை திணிப்பதற்கு தயாராக இருக்கிறேன்” என்றார் தந்திரி ரஜூவரு கண்டராவு. 

சபரிமலை தந்திரியின் கருத்தினை தொடர்ந்து, கோவிலில் இருந்து திரும்பிச் செல்ல பெண்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பலத்த பாதுகாப்புடன் பெண்கள் திரும்பி அழைத்துச் செல்லப்படுவார்கள் என ஐ.ஜி.ஸ்ரீஜித் கூறியுள்ளார். இதனிடையே, 18 ஆம் படியின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.