இந்தியா

சர்ச்சையான சபரிமலை தீர்ப்பு - மறுசீராய்வு மனுக்கள் இன்று விசாரணை

webteam

சபரிமலை தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரிய மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

சபரிமலையில் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 வயது 50 வயது வரையிலான பெண்களுக்கு தடை இருந்தது. இதனை எதிர்த்து பலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சென்று வழிபடலாம் என கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதிலிருந்து சபரிமலை தனது இயல்பு நிலையை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு செல்லும் சீசனில், பெண் பக்தர்கள் சிலரும் வருகை தந்தனர். அவர்களுக்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இறுதியில் இரண்டு பெண்கள் மட்டும் அதிகாலை நேரத்தில் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டனர் என்ற தகவல்கள் வெளியானது. 

இந்த விவகாரம் ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, இதற்கிடையே அகில இந்திய ஐயப்ப சேவா சங்கம் மற்றும் நாயர் சேவா சங்கள் உள்ளிட்ட அமைப்புகள், பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டு வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வின் கீழ் இந்த மனுக்கள் விசாரிக்கப்படவுள்ளது.