சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் நாள்தோறும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கிற்காக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படுகிறது. 2 மாதங்கள் வரை கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிப்பர்.
ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த ஆண்டு, தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விடுமுறை தினங்கள் மற்றும் மகர விளக்கு நாளில் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா இல்லை என்று சான்றிதழ் கொண்டுவரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.