கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 42 நாட்கள் மண்டலப் பூஜைக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று மாலை மண்டலப் பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு சந்நிதானத்தின் நடையை தந்திரியின் பூஜைக்கு பின்பு திறக்கப்பட்டது. மண்டலப் பூஜை அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெறுகிறது. மண்டலப் பூஜைக்காக இன்று திறக்கப்படும் கோயிலின் நடை மண்டல பூஜை முடிந்த பின்பு அடைக்கப்படும். மேலும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.
இந்நிலையில் இன்று ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன, இதனையடுத்து இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். ஏற்கெனவே சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதன் மீது ஜனவரி 22ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் நேற்று கூறியுள்ளது. இந்தச் சூழலில் வழக்கு விசாரணைக்கு வரும் வரை சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்குமாறு வழக்கறிஞர் மாத்தீவ்ஸ் நெடும்பாரா கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்று பூஜைக்காக சபரிமலை திறக்கப்பட்டுள்ள நிலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெண்களை சபரிமலையில் அனுமதிப்போம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதனால் சன்னிதானம், நிலக்கல், பம்பை பகுதியில் பெண் பக்தர்கள் வரக்கூடும் என்பதால் அசம்பாவிதம், வன்முறை ஏற்பட்டால் அதை தடுப்பதற்காக 15 ஆயிரத்து மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.