மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை மண்டல பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டு, தினசரி நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று வந்தன. முக்கிய விழாவான மண்டல பூஜை கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றதை அடுத்து, அன்றிரவு ஹரிவராசனத்திற்குப் பின் கோயில் நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து, மகர விளக்கு பூஜைகளுக்காக நேற்று மாலை 5 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டது.
மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி, முறைப்படி கோயில் நடையை திறந்து வைத்ததும், திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி ஐயப்பனை தரிசித்தனர். முக்கிய விழாவான மகர விளக்கு பூஜை வரும் ஜனவரி 15 ஆம் தேதி நடத்தப்படுகிறது. அதன் பின் கோயில் நடை ஜனவரி 21 ஆம் தேதி அடைக்கப்படுகிறது. மகர விளக்கு பூஜைகளுக்காக நாடு முழுவதும் இருந்து திளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் திரளான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.