இந்தியா

கேரளாவில் இடதுசாரிகள் தோல்வியடைய சபரிமலை விவகாரமே காரணம் !

webteam

சபரிமலை விவகாரமே மக்களவைத் தேர்தலில் தோல்வி ஏற்படக் காரணம் என கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு முதல் முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய்வதற்காக ஆளும் இடதுசாரி அரசு அமைத்த குழு, அண்மையில் அதற்கான காரணங்களை பட்டியலிட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் தெரிவித்திருந்த விவகாரங்கள் அனைத்தும், அக்கட்சியின் பத்திரிகையான தேசாபிமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி, பிந்து மற்றும் கனகதுர்கா என்ற 40 வயதுக்குட்பட்ட இரு பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று,சபரிமலையில் தரிசனம் செய்ய வைத்‌ததே மக்களவைத் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் மக்களவை தேர்தலில் பெரிதுப்படுத்தி பரப்புரை மேற்கொண்டதால், வாக்காளர்கள் மனம் மாற காரணமாக அமைந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சபரிமலை விவகாரத்தால், தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்கெனவே தெரிவித்திருந்த சூழலில், தற்போது அதற்கு மாறாக அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.