இந்தியா

மண்டல பூஜைகள் முடிந்து சபரிமலை நடை அடைப்பு

webteam

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தியான திருச்சூர் கொடகராவை சேர்ந்த ஏ.பி.உண்ணிகிருஷ்ணன் கோயில் நடையை திறந்து சிறப்பு பூஜைகள் செய்தார். இதையடுத்து கடந்த டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ம் தேதியும் மகரவிளக்கு பூஜையும் நடைபெற்றன.

இதற்கிடையே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்த நிலையில், இரண்டு மாதங்களுக்குப்பின் சபரிமலை நடை இன்று அடைக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கோயிலில் இன்று ராஜ குடும்பத்தினருக்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ராஜ குடும்பத்தினரின் தரிசனம் முடிந்ததும், நடை அடைக்கப்பட்டு கோவில் சாவியை தேவஸ்வம்போர்டு சார்பில் ராஜ குடும்ப பிரதிநிதியான ராஜ ராஜவர்மாவிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மாதாந்திர பூஜைக்காக வரும் பிப்ரவரி 12ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். அப்போது தொடர்ந்து ஐந்து நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும் என கேரள தேவஸ்வம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.