சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலையில், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘பெண்கள் மீதான இத் தடைக்கும் இந்து மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இத்தடைகள்தான் இந்து மதத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். ஒருவரை கர்ப்பக்கிரகத்தில் நுழையத்தான் தடை விதிக்கலாமே தவிர, பாலின அடிப்படையில் கோயிலுக்குள் நுழையவே தடை விதிக்க முடியாது. ஆகையால் கேரளாவின் தடை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இத்தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்’ என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதுதொடர்பான முடிவை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்ற வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.