இந்தியா

சபரிமலை 18 ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா !

rajakannan

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண் செயற்பாட்டாளர் வீட்டின் மீது ஆர்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

ஹைதராபாத்தைச் சேர்ந்த மோஜோ தொலைக்காட்சி செய்தியாளர் கவிதாவும், பெண்ணியவாதியான ரஹானா பாத்திமா என்பவரும் இன்று காலை சபரிமலைக்கு சென்றனர். பலத்த பாதுகாப்புடன் கவச உடைகள் அணிந்தபடி இருவரும் ஐயப்பன் கோயில் நோக்கிச்சென்றனர். இவர்கள், சபரிமலை சன்னிதானத்தின் நடைப்பந்தல் வரை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.ஆனால் அதற்கு மேல், இரு பெண்களையும் அனுமதிக்க மறுத்து ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பக்தர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்தியும், ஐயப்ப பக்தர்கள் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நிலையில், இரு பெண்களையும் திருப்பி அனுப்ப, கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. பெண் செய்தியாளர்கள், பெண்ணியவாதிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும், பக்தர்களை அனுமதிப்போம் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

பெண்ணிய செயற்பாட்டாளர் ரெஹ்னா ஃபாத்திமாவை திருப்பி அனுப்பும் முயற்சியில் அவருடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், திரும்பி செல்ல அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. எல்லா பக்தர்களை போல 41 நாட்கள் முறையாக விரதம் இருந்துள்ளதாகவும், சபரிமலை கோவிலுக்குள் செல்ல விரும்புவதாக ரெஹ்னா ஃபாத்திமா கூறியுள்ளார். இதனிடையே, கொச்சியில் உள்ள ரெஹ்னாவின் வீட்டின் மீது ஆர்பாட்டக்காரர்கள் சிலர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஆர்பாட்டக்காரர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கேரள அரசு நெருப்புடன் விளையாடுவதாக அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா எச்சரித்துள்ளார். அதேபோல், பெண் பக்தர், பெண் பத்திரிக்கையாளர் போலீஸ் பாதுப்புடன் அழைத்துச் செல்லப்பட்டது ஏன் என கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து 18 ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் (மேல்சாந்திகள்) தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அர்ச்சகர்களின் தர்ணா போராட்டத்துக்கு தேவசம் போர்டு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சபரிமலை கோயிலுக்குள் இரண்டு பெண்களையும் அனுமதித்தால் கோயில் நடையை மூட வேண்டியிருக்கும் என பந்தளம் மன்னர் கூறியுள்ளார். 

இதனிடையே, சபரிமலையில் காவல்துறையினர் பிரச்னையை ஏற்படுத்தமாட்டார்கள் என ஐ.ஜி. ஸ்ரீஜித் கூறியுள்ளார். பக்தர்களுடனான மோதல் தங்களுக்கு தேவையில்லை, தாங்கள் சட்டத்தினை பின்பற்றுகிறோம் என தெரிவித்தார். சபரிமலை விவகாரத்தில் தற்போதையை நிலவரம் குறித்து கேரள போலீசாரிடம் அம்மாநில ஆளுநர் கே.சதாசிவம் கேட்டுள்ளார்.