இந்தியா

சபரிமலையில் தனிவரிசை, பெரிய பந்தல்... மும்மரமாகும் ஏற்பாடுகள் பற்றி சிறப்பு அதிகாரி பேட்டி

webteam

பெண்கள், முதியவர் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிய நடைப்பந்தல் மட்டுமின்றி, அதற்கு முன்புள்ள பகுதிகளில் தனி வரிசை அமைக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என சபரிமலை சிறப்பு அதிகாரி விஷ்ணுராஜ் ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவிக்தார்.

சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பை தொடர்ந்து, பக்தர்களுக்கு  செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து சபரிமலை சிறப்பு அதிகாரி விஷ்ணுராஜ் ஐஏஎஸ் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள பெண்கள், குழந்தைகள், முதியவர், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனி வரிசையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பெண்கள், முதியவர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு எளிய தரிசனத்திற்காக அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் ஆய்வு செய்ததில் திருப்திகரமாக உள்ளது. இதுவரை 512 குழந்தைகள், 500க்கும் அதிகமான வயதானவர்,  பெண்கள், 25க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளும் தனி வரிசையில் சென்று தரிசனம் முடித்துள்ளனர்.

பெரிய நடைப்பந்தலின் ஒரு ஓரத்தில் இந்த தனி வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு தண்ணீர், மருத்துவ வசதி  உள்ளிட்டவை வழங்கி உதவ முடியும். 18ம் படிக்கு கீழேயும் பெண்கள் முதியவர் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு களைப்பைப் போக்கும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அங்கு தங்கி ஓய்வெடுக்கலாம் அல்லது 18ம் படி ஏற வசதி செய்யப்பட்டுள்ளது

இவர்களுக்காக பெரிய நடைப்பந்தல் மட்டுமின்றி, அதற்கு முன்புள்ள பகுதிகளில் தனி வரிசை அமைக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். குழுவாக வருவோரில் பெண்கள், முதியவர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் இருந்தால் அவர்களை தனி வரிசைக்கு பிரிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு குழுவை பிரிக்காமல் அவர்கள் தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சபரிமலை சிறப்பு அதிகாரி விஷ்ணுராஜ் ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவிக்தார்.