இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று அடைப்பு

மண்டலப் பூஜை நிறைவடைந்ததையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று இரவு சாத்தப்படுகிறது. கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலின் நடை மண்டலப் பூஜைக்காக நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து மண்டலப் பூஜை முழுவதும் சபரிமலை சன்னிதானம் போர்களம் போல காட்சியளித்தது. பெண்கள் அமைப்புகள் பல சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் முயற்சிகள் கைவிடப்பட்டது. இதன் காரணமாக சபரிமலை கோயிலில் தொடக்கத்தில் பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது. மேலும் சன்னிதானம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்ததால் சர்ச்சை எழுந்தது. 

இத்தனை பிரச்சனைகளை கடந்து சபரிமலை ஐயப்பன் கோயிலின் பிரசித்தப்பெற்ற மண்டலக்கால பூஜைகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. தந்திரியின் பூஜைக்கு பின்பு ஹரிவராசனம் பாடிய பின்பு இரவு 10 மணிக்கு சன்னிதானத்தின் நடை சாத்தப்படும். பின்பு மீண்டும் ஐயப்பன் கோயிலின் நடை மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மாலை திறக்கப்படும்.