இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திடீரென அடைப்பு !

webteam

கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் இரண்டு பெண்கள் இன்று அதிகாலை தரிசனம் செய்ததால் கோயில் நடை திடீரென அடைக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜை நிறைவடைந்து மகர பூஜைக்காக நடை டிசம்பர் 30-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. வரும் ஜனவரி 14-ம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் சபரிமலைக்கு வந்த இரண்டு பெண்கள், அதிகாலையில் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ததால், கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 50 வயதுக்கும் குறைவான பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கனகா, துர்கா ஆகிய இரண்டு பெண்கள்தான் இன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலுக்குச் சென்றுள்ளனர். பின்பு கோயிலின் பின் பக்க வழியாக சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்களுக்கு காவல்துறையினர் முழுப்பாதுகாப்பு அளித்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் பொது வழியில் சென்று தரிசனைம் செய்ததாகவும், அவர்கள் 18 படிகளை ஏறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை தரிசனம் செய்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. பின் சன்னிதானத்தின் நடை திடீரென அடைக்கப்பட்டது. மேலும் பெண்கள் தரிசனம் செய்ததால் தந்திரியின் பரிகார பூஜைக்காக சன்னிதானத்தின் நடை அடைக்கப்படுவதாகவும், பரிகார பூஜைக்கு பிறகு நடை திறக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.